Showing posts with label தேனீர் தருணம். Show all posts
Showing posts with label தேனீர் தருணம். Show all posts

11/28/2013


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!
















                                                                              - ரிலாக்ஸ் ப்ளீஸ்



12/14/2012

காணி நிலம் வேண்டும்



காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்; அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை 
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிள நீரும்,
பத்துப் பனிரண்டு - தென்னைமரம் 
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி 
முன்பு வரவேணும்; அங்குக்
கத்துங் குயிலொசை - சற்றே வந்து
காதிற் படவேணும்; - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா நின்றன்
காவலுற வேணும்; - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்..
                                                                                                                                 - பாரதி
                                                                                       

12/24/2011

உடன் உறையும் உன்னதம்


                                                    





இமைக்கும் நொடிப் பொழுதில்

 எழிலுரு மறைந்திடுமோ
இமைக்கா இருவிழிகள்
 எனக்கு தரக் கேட்டேன்

பூந்தளிர் நடையினால்
 பொன்னுடல் நொந்திடுமோ
பூக்கள் போர்த்திய
 புதுனிலம் நான் கேட்டேன்

கேளாமல் தரும் முத்தம்
 கண்ணீரை தந்திடுமோ
அன்பு பெருகுங்கால்
 அழாத மனம் கேட்டேன்

கரையும் மணித் துளிகள்
 காலத்தை கரைத்திடுமோ
உறையும் உன்னதமே
  ஓடாத நாள் கேட்டேன் - என்னுடன்
உறையும் உன்னதமே
  ஓடாத நாள் கேட்டேன்
                                                             
                                                                  - தாமரை யோகேஷ்