5/29/2013

மினியபோலிஸ் உழவர் சந்தை


 நான் திருமணம் முடிந்து இங்கு குடிபெயர்ந்தபோது அமெரிக்கா என்னிடம் இருந்து பிடுங்கி  கொண்டவை பல. காலையில் கேட்கும்  பால் வண்டி சத்தம், அம்மாவின் பெட் காபி (டீ) , என்ன காய் என்றே புரியாமல் கூவி கொண்டுவரும் காய்கறிக்காரன், 11 மணிக்கு வரும் கீரைக்காரம்மா, மணக்கும் மல்லிகை, ரோட்டோரம் சூடாக கிடைக்கும் பஜ்ஜி போண்டா காரச்சட்னி, சண்டே சரவணாஸ்டோர் ஷாப்பிங்...ம்ம்ம் பட்டியல் முடிக்க இந்தப் பக்கம் போதாதுங்க..!

                யதோச்சையாக இந்த ஊர் உழவர் சந்தைக்குள் நுழைந்தபோது  ஏதோ கால்கள் தாய் மண்ணை தொட்டது போல் ஒரு சந்தோஷம்..நம்ம ஊரை  தோக்கடிக்கரமாதிரி ஒரு கூட்டம், கண்ணை பறிக்கர நிறத்துல காய்கறிகள், சந்தைக்கே உரிய வாசனை ( யாருங்க அது நாத்தம்னு சொல்ரது), நம்மிடம் சினேகமாய் கேரட் விற்கும் கடைகாரர், கீரை வகையை கூறி அவர்கள்   சமைக்கும் விதத்தை விளக்கும் பெண்மணி,விதவிதமாய் பருப்பு வகைகள், நம்மை இசைத்து, பாடி மகிழ்விக்கும் கலைஞர்கள், நாட்டுத்தேன், சமையலுக்கு மணமூட்டும் வஸ்த்துக்கள், அழகு கொஞ்சும் மலர் வகைகள்..எல்லாம் வாங்கி முடித்ததும்,  அப்படியே களைப்பு தீர ஒரு கப் காபி, சாண்ட்விச், டோனட்  இதவிட வேற என்னங்க வேணும்? 

                  பொதுவாக நாங்கள் சனிக்கிழமை காலை இங்கு வருவோம், 11 மணிக்கு மேல் மார்கெட்டில் பாதி விற்றுவிடும் என்பதால் 8 மணிக்குள் செல்வது உசிதம். அதோடு காலைக்காற்றை சுவாசித்துக்கொண்டே நடப்பது ஒரு சுகம்..போகும்போது கொஞ்சம் சில்லறையும், ஒரு கைப்பையும் எடுத்து செல்ல வேண்டும். சில்லறை இல்லையென்றால் நம்ம ஊர் பஸ்ஸை விட கஷ்டமாகிவிடும்.

                    குளிரூட்டபட்ட அறையில் பல நாட்களாய் வாடி, செயற்கையாய் புதிய தோற்றமளிக்கும் காய்கறிகள் போல் இல்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொண்டுவரப்படுவதால் வாங்கும்போது மனதுக்கு நிறைவாக இருக்கும்.  வீட்டிலிருந்து லிஸ்ட் எடுத்துக்கொண்டு வருவது இங்கு செல்லாது. கண்டிப்பா ஒரு மடங்கு   அதிகம் வாங்கி வருவீர்கள். எப்படியோ எங்களைப்போல சொந்த ஊரைவிட்டு தொலைதூரம் வாழ்பவர்களுக்கு இந்த இடம் ஒரு வர(வார)ப்ப்ரசாதம் என்றால் மிகையாகாது.





  
     






                                                                                                Photos courtesy : Sabrina






                                            


2 comments: